Friday, 3 June 2011

ராம்தேவ் போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது : நடிகர் ஷாருக்கான்! ராம்தேவ் போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது : நடிகர் ஷாருக்கான்


மும்பை : ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக டெல்லியில் நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ‘யோகா குரு’ பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். அவரது போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தான் நடித்த ‘ரா ஒன்’ படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிக்காக மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு நேற்று சென்றார். அப்போது ராம்தேவ்வின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பீர்களா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், ‘‘ஊழலுக்கு எதிராக ராம்தேவ் அறிவித்துள்ள போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஒருவர் தலைவர் ஆனவுடன், இதுபோன்ற போராட்டங்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது.ராம்தேவ் யோகாகுரு. தனக்கு எது பொருத்தமானதோ அதைத்தான் செய்ய வேண்டும். அரசியலில் நுழைய இது சரியான வழி அல்ல. அவரது போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘‘இளைஞர்கள் ஊழலுக்கு இரையாகி விடக் கூடாது. என்னிடம் அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வரவேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை, ரசிகர்கள் எல்லாரும் என்னை பாராட்ட வேண்டும் என விரும்புகிற ஒரு சுயநலவாதியே. எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது’’ என்றார். டெல்லியில் ஊழலுக்கு எதிராக சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது ஆமீர்கான் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 2 June 2011

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

போலி விளம்பரங்கள் படுத்தும்பாடு

ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவர்களை தங்களது மாணவர்கள் என்று சில பயிற்சி வகுப்பு மையங்கள் பொய் விளம்பரம் செய்து வருகிறது.தங்கள் பயிற்சி மையங்களில் பயிலாத மாணவர்களின் பெயர்களை, தங்களது பயிற்சி மையத்தில் படித்ததால்தான், டாப் ரேங்க் எடுத்துள்ளனர் என்பது போன்று விளம்பரப்படுத்தியிருப்பதைப் பார்த்து பல மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உதாரணமாக டாப் ரேங்க மாணவர் ப்ருத்வி தேஜ் இம்மாடி, எந்த பயிற்சிக்கும் செல்லாமலே முதல் மாணராகத் தேர்வாகியுள்ளார். ஆனால், இவர் தங்கள் மாணவர் என்று ஒரு பயிற்சி நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவர் கூறுகையில், நான் 11ம் வகுப்பு படிக்கும் போது என் பெயருக்கு ஒர பயிற்சி நிறுவனத்தில் இருந்து நோட்ஸ்கள் வந்தன. ஆனால் அந்த நிறுவனத்தைப் பற்றி அதற்கு முன்பும் சரி, பின்னரும் நான் வேறு எதையும் அறிந்திருக்கவில்லை.  அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவும் இல்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டகள் கழித்து, இப்போது நான் டாப் ரேங்க் எடுத்ததற்கு அந்த நிறுவனம் சொந்தம் கொண்டாடுவதில் எந்த அடிப்படையும் இல்லை என்று கூறுகிறார்.இது போல பல மாணவர்கள் தங்கள் பெயர் இது போன்ற விளம்பரத்தில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து புகார்களும் கொடுத்துள்ளனர்.சில மாணவர்கள், நாங்கள் கோச்சிங் சென்டரில் புத்தகங்கள் மட்டுமே வாங்கியுள்ளோம். வகுப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் அங்கு படித்த மாணவர்கள் என்று அந்த பயிற்சி நிறுவன விளம்பரங்களில் போடப்பட்டுள்ளது.சில கோச்சிங் சென்டர்கள், நேரடியாக டாப் ரேங்க் எடுத்த மாணவர்களிடம், அவர்களது பெயரை விளம்பரத்தில் போட்டுக்கொள்ள பணம் கொடுப்பதாக பேரம் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.இது குறித்து பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆந்திராவைச் சேர்ந்த பொங்குரு நாராயணா என்பவர் கூறுகையில், பயிற்சி நிறுவனங்கள் டாப் ரேங்க் மாணவர்களை உருவாக்குவதை விட்டுவிட்டு, டாப் ரேங்க் மாணவர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஒரு சில பயிற்சி நிறுவனங்கள் டாப் ரேங்க் மாணவர்களை தங்கள் விளம்பரங்களில் இடம்பெறச் செய்ய பல லட்சம் ரூபாய் வரை செலவிடுகின்றன என்கிறார்.

திருக்குறள்

திருக்குறள்   உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியம் இதனை இயற்றியவர் 
திருவள்ளுவர் . இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது.
மறைமலை அடிகள்  செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்

பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால் " என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள் , இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல் " என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா  என்னும் வெண்பா  வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி , பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர்  உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.



திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களை பின்பற்ற தான்  நம்மால் முடியவில்லை அதனை பாதுகாப்பது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.



                           வாழ்க தமிழ்  வளர்க தமிழ் !

Wednesday, 1 June 2011

ஆரம்பம்

எனது மனதில் தைத்த விஷயங்களை அரட்டை அடிப்பதற்காக ஆரம்பித்த ஒரு தளம்.உங்கள் நல்லாதரவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் - தங்கம்