Friday 3 June 2011

ராம்தேவ் போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது : நடிகர் ஷாருக்கான்! ராம்தேவ் போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது : நடிகர் ஷாருக்கான்


மும்பை : ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக டெல்லியில் நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ‘யோகா குரு’ பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். அவரது போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தான் நடித்த ‘ரா ஒன்’ படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிக்காக மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு நேற்று சென்றார். அப்போது ராம்தேவ்வின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பீர்களா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், ‘‘ஊழலுக்கு எதிராக ராம்தேவ் அறிவித்துள்ள போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஒருவர் தலைவர் ஆனவுடன், இதுபோன்ற போராட்டங்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது.ராம்தேவ் யோகாகுரு. தனக்கு எது பொருத்தமானதோ அதைத்தான் செய்ய வேண்டும். அரசியலில் நுழைய இது சரியான வழி அல்ல. அவரது போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘‘இளைஞர்கள் ஊழலுக்கு இரையாகி விடக் கூடாது. என்னிடம் அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வரவேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை, ரசிகர்கள் எல்லாரும் என்னை பாராட்ட வேண்டும் என விரும்புகிற ஒரு சுயநலவாதியே. எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது’’ என்றார். டெல்லியில் ஊழலுக்கு எதிராக சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது ஆமீர்கான் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment